ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை யாழில் மரணம்

இந்தயாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று யாழில் மரணமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கையை ஈவிரக்கமின்றி தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தந்தையின் உடலையாவது தான் இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முருகனுடைய தந்தையின் உடல் இத்தாவில் பளையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளது.
இதேவேளை ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 வருடங்களாக முருகன் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.