தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதமிழ்நாட்டில் மேலும் 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், தற்போது நோயுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துவருகிறது.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசினார்.

"கொரோனா தடுப்புப் பணி எப்படி நடைபெறுகிறது, அரசு அறிவித்த அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் எப்படி செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. நோயைத் தடுப்பதுதான் முக்கியம். அரசு அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமரும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தினார்கள். அனைத்து மாநில முதலமைச்சர்களும் தடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்கள்.

மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு கூறுகின்ற வகையில் தமிழக அரசு இந்த நோய்த் தடுப்புப் பணியை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது" என முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.