கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள் - சமூக ஊடகத்தை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனா தொடர்பாக உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடல்களுள் சிலவற்றை பார்க்கலாம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா குறித்த பாடலொன்றை பாடியிருக்கிறார். ''அணுவை விடவும் சிறியது.. அணுகுண்டை விடவும் கொடியது'' எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு அவரே மெட்டமைத்து பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார். தமிழில் வைரமுத்துவைப் போன்று தெலுங்கில் வெண்ணிலகண்டி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் காய்கனி ஆகியோர் கொரோனா குறித்து எழுதிய பாடல்களையும் அந்தந்த மொழிகளிலேயே பாடி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.