இந்தியாவுக்கென அசத்தல் ஆப் உருவாக்க ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் புது கூட்டணி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து வீசாட் போன்ற செயலியை (சூப்பர்-ஆப்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் புதிய செயலிக்கான நிதி, தொழில்நுட்ப வசதி மற்றும் இதர பணிகளை கவனிக்க இருக்கின்றன. 

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இதுகுறித்த பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய சூப்பர்-ஆப் செயலியை கொண்டு பயனர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவில் வீசாட் செயலி குறுந்தகவல் மட்டுமின்றி உணவு ஆர்டர் செய்வது, கால் டாக்சி, விமான சீட்டு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை புதிய செயலி கொண்டு ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர் மூலம் மளிகை பொருட்களையும் விற்பனை செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயலியை கொண்டு ஜியோமனி மூலம் பண பரிமாற்றம் மற்றும், பேமன்ட் சேவையை பயன்படுத்தலாம் என தெரிகிறது.